Thursday, January 15, 2009

Tamilnadu history..in a short form

வரலாற்றைப்பொறுத்தவரை ஒரு எளிய முன்வரைவு நமக்கு அவசியமானது. தமிழக வரலாற்றை நாம் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1. சங்க கால தமிழகம்

சங்க காலப்படைப்புகளில் இருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நாம் உருவகித்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் இது. சிலப்பதிகாரம் வரைக்கும் சித்தரிக்கப்படும் தமிழகம் இது என்று சொல்லலாம். கரிகால்சோழன், பாண்டியன் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோர் இக்காலகட்டத்தின் மிகச்சிறந்த மன்னர்கள். இக்காலகட்டத்தில் சேரசோழ பாண்டிய அரசுகள் இருந்தாலும் அதேயளவுக்கு வலிமையாக இனக்குழுத்தலைவர்களும் நாடாண்டார்கள். பெரும்பாலான போர்கள் மூன்று முடிமன்னர்களும் சிறு ஆட்சியாளர்களை வென்று பெரிய அரசை உருவாக்கும் பொருட்டு நிகழ்த்தியவை

2. களப்பிரர் கால தமிழகம்

கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தக்காண மையநிலத்தில் இருந்து வந்த சமணர்களான களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்ட காலகட்டம். கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவை அதிகம் கிடைக்காத காலகட்டம். சம்ஸ்கிருத சமண நூல்களை ஆதாரமாகக் கொண்டு இக்காலகட்டத்தைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்யலாமென்றாலும் அப்படி ஏதும் செய்யப்பட்டதாகத்தெரியவில்லை. திருக்குறள் முதலிய நீதிநூல்கள் உருவான காலகட்டம் இது.

3. பிற்கால தமிழகம், சோழ பாண்டியப்பேரரசுகள்

கிபி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர் ஆட்சி முடிந்து உருவான தமிழ் முடிமன்னர்களின் ஆட்சி. வடக்கே பல்லவர்களும் தெற்கே சோழர்களும் களப்பிரரை வென்று தங்கள் அரசுகளை மீட்டனர். பேரரசுகள் உருவாயின. ஆரம்பத்தில் பல்லவப்பேரரசு. பின்னர் சோழப்பேரரசு. கடைசியில் சிறிதுகாலம் மட்டும் பாண்டியப்பேரரசு. நரசிம்மவர்ம பல்லவன், ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்கள் இக்கால பெரும் மன்னர்கள்

4..டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு

1310ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபது மாலிக் காபூர் தெற்கே படைகொண்டு வந்து தமிழ்ப்பேரரசுகளை அழித்தார். பின்னர் கிட்டக்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் சுல்தான்களின் தளபதிகளால் தமிழகம் ஆளப்பட்டது.
5. நாயக்கர், மராட்டியர் காலம்

விஜயநகர மன்னர் குமாரகம்பணன் 1371ல் மதுரையைக் கைப்பற்றுவதுடன் தொடங்கும் இக்காலகட்டம் 1730 வரை நீள்கிறது. மதுரை, தஞ்சை,செஞ்சி ஆகியவற்றின் நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டது. ராணி மங்கம்மாளும் திருமலை நாயக்கரும் நாயக்கராட்சியின் சிறந்த மன்னர்கள். பின்னர் தஞ்சாவூர் மராட்டியரால் ஆளப்பட்டது

6. ஐரோப்பியர் காலம்

பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களும் சென்னையை ஆங்கிலேயர்களும் உருவாக்குவதுடன் தொடங்கும் காலகட்டம். 1947 வரை நீண்டது

7.விடுதலைக்குப்பின்.

1947 தேசவிடுதலைக்குப்பின் தமிழகம் 1951ல் மொழிவழி மாநிலமாக உருவானது.

என்று ஏழு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறோம்.

Jeyamohan